வேண்டுதல்

1.
அன்னை தருதமிழும் அடியில் மழலையாய்
பின்னர் மொழியாகி பேச்சாகும் நிலைபோல
முன்னர் அன்புமலர் முகிழ்த்திட்ட என்சகாவும்
என்னுயி ரென்றுறவாய் இயல்புடைத்த நிலைசொல்வேன்

2.
எந்தன் வாழ்வதுவும் இருள்வானில் நிலையின்றி
முந்தும் துயர்முகிலில் முழுதும் மறைந்திருக்க
சிந்தும் புன்னகையால் சீரான கதிர்வீசி
விந்தையென மகிழ்வுறவே விளைந்த்தோர் பிறைநிலவு

3.
அந்நிலவின் கதிராலே அகமெலாம் குளிர்ந்திருக்க
முன்னாளின் துயர்வெம்மை முழுவதும் தளைநீங்கி
என்னாவி அவன்மொழியின் எழிற்றேனுக்காயலைய
பின்னும் பிறவிதன் பெரும்பயனே கண்முன்னே

4.
நாளொரு பேச்சிலே நான்கொண்ட அன்புமலர்
பாளை பிளந்தன்ன பாற்சிரிப்பில் இதழ்விரித்து
மாளாத பேரன்பு மணம்பரப்பி அவனின்றேல்
தாளாத நிலைதந்த தன்மையினை என்சொல்வேன்

5.
அன்பென்று அவன்சொல்ல ஆழமனதில் தேனருவி
இன்பமென்று சொன்னாலோ என்னாவி விண்ணாட்டில்
மன்பதையாய் நான்பிறந்த மாண்பனைத்தும் அவனடியில்
என்புருகப் பொழிந்திடவே இயைந்திட்டேன் பேரன்பால்

6.
விடுமுறை வாந்தாலோ வெங்கனலாய் என்னுள்ளம்
திடுமென்று நெஞ்சுமலர் தீயினிலே உயிர்கருகும்
அடுத்த நாளினிலே அன்புமொழி கண்டுவிட்டால்
விடுத்த உயிர்மலரும் விந்தையென மணம்கமழும்


7.
ஏழையான் எடுத்திட்ட இதயத்துக் கோவிலிலே
மேழியுடைத்திட்ட மேன்மையுடை என்னிறைவன்
ஆழியுதிக்கின்ற அருமுத்து போல்நகையான்
ஊழிவரை அவனடியின் ஊழியத்தில் உளம்தொலைப்பேன்


8.
பேசுகின்ற போழ்தினிலும் பிறைநிலவை முகிழ்மூடும்
மாசதனைப் பல்நடுவில் மணித்துளிகள் இரண்டேனும்
ஆசைப்பதிலியன்றேல் அடிமனதில் வேல்பாயும்
வீசுகின்ற எரிமலையின் வெறிக்குழம்பில் உயிர்சாகும்.

9.
அவனே வாழ்வெனவே ஆவியும் உரைத்தபின்னே
சிவனே வந்தாலும் சிந்தையிலே இடமில்லை
இவனைப் பெறுதற்கே இப்பிறவியென்றெந்தன்
தவமே முன்வந்து தானுரைத்த நிலையென்னே

10.
இத்துணை இருந்தாலும் எனக்கோர் குறையுண்டு
பித்தனென் வாழ்வில் பிறிதொன்றும் இன்பில்லை
அத்தனாய் நான்கொண்ட அவனுக்கே என்னாயுள்
தத்தமாய்த் தருகின்ற தகவில்லை என்செய்வேன்

11.
அன்னவனின் நினைவொன்றே ஆவியென ஆனபின்னே
சின்னவனென் வெறுப்பென்றும் சிறப்பான விருப்பென்றும்
தன்னுடையதில்லாத தகைமையே உடைத்தேன்யான்
இன்னமும் வாழ்வினிலே எல்லாமே அவனன்பே

12.
சின்னஞ்சிறு வயதில் சேர்க்கின்ற பொம்மையென
என்னுள் அவன்னினைவை எடுத்தெடுத்துச் சேர்த்திட்டேன்
பின்னர் மழலைக்குப் பிறிதோர் உலகமதுபோல்
அன்னான் நினைவொன்றே அகிலமாய் அறிந்திட்டேன்.

13.
காதலோ யிஃதென்று களிவேடிக்கையில்சிலபேர்
வேதனையெதற்கென்று வெற்றுத் தேற்றலில்சிலர்
மீதியே யில்லாமல் மெல்லுயிரைத் தந்தபின்னே
சாதல் வரும்வரையில் சளையாத அன்பிஃது

14.
ஏனித்துணை அன்பிங்கு என்மீதென்றெந்தன்
வானிகர் அன்புருவம் வாய்மொழியும் கேட்டது
தானே பெருகிவரும் தாளாற்றும் பேராற்றை
மானும் அன்பிற்கு மறுபதிலென்ன சொல்ல

15.
அன்னவன் மீதன்பு ஆறாகப் பொழிதற்கே
என்னையும் இறைவன் இவ்வண் படைத்திருக்க
பின்னையும் கேள்விகளால் பெரிதான பயனென்ன
இன்னும் பிறவியிலும் என்வேண்டல் இதுதானே

முனைவர்.Dr.ஷங்கர நாராயணன்.

போற்றுதும்..!

போற்றுதும் பொன்தமிழை புத்தேள் உலகினுக்கும்
ஆற்றல் அடைகொடுக்கும் அன்னையினை மற்றிங்கே
காற்றும் வருமுன்பே கடிபுகழ் தான்கொண்ட
பாற்கடல் அமுதனைய பாதிகழும் செவ்வியினை

என்றும் ஏற்றமே என்தமிழின் எழில்விளங்க
மன்றத்தில் மாண்போடு மறுக்கின்றோர் தனையெதிர்த்து
என்றுமுள தென்றமிழில் இயற்றிடுவோர் தம்வாழ்க்கை
நின்று நிலைத்துவிடும் நித்திலத்தாள் அவள்புகழால்

மூவேந்தர் மடிவளர்ந்து முற்றும் கலைபடைத்து
பாவேந்தர் உளம்நிற்கும் பைங்கொடியே செந்தமிழே
சாவேந்தும் வேளையிலும் சந்தனத் தமிழ்மணத்தை
நாவேந்தி நானிருக்க நல்லருள் புரிந்திடுக

பாவலர் தம்நாவில் பயின்றுவரும் தென்றலவள்
காவலராம் வேந்தரிடம் கவினுறையும் காலமகள்
மேவியிந்த மேதினியில் மென்மேலும் மெருகேறும்
ஆவிதிகழ் தமிழ்மகளின் ஆன்றபுகழ் உலகறியும்

அன்புடன்
முனைவர்.க.சங்கரநாராயணன்

தமிழே உயிரே..!

தமிழே உயிரே தரமுடைய வாழ்வருளும்
அமிழ்தே ஆரணங்கே அழகுடைய நின்கனிவாய்
உமிழ்ந்த ஓர்துளியும் உவமையிலாத் தேனாகி
கமழும் புகழ்படைக்கும் கன்னிநீ வாழியவே

வாழிநீயெந்தாய் வையங்கள் உள்ளவரை
ஆழியின் முத்துடைத்த அருபாண்டியர் மடிதவழ்ந்து
மேழைச் சோழரிடம் மெல்ல நடைபயின்று
கீழை சேரர்தம் கிளர்மொழியில் ஆளானாய்

ஆய்கின்ற புலவோர்க்கு அருமருந்தே நிதமும்
தேய்கின்ற மனத்திற்கு தெள்ளமுதே உலகுக்கு
வேய்கின்ற பெரும்பொருள் விழிக்கு பெருந்துணையே
தாய்கொண்ட பேரன்பில் தனியின்பம் விளைப்பவளே

விளைகின்ற கவிப்பொழிவில் வித்திடும் கலைமகளே
திளைக்கின்ற தெள்ளமுதாய் திரைகடல்கள் பலகடந்தும்
நிலைகொண்ட பெரும்புகழே நின்திறனை போற்றுதுமே
கலைகொண்ட வாழ்வதனை கவினோடு எனக்கருள்க

அன்புடன்
முனைவர்.க.சங்கரநாராயணன்

தமிழ் மகள் !

உந்தம்மை போன்று உயரிய புதுக்கவிதை
எந்தம் மொழியினின்று எடுத்துரைக்க ஆவல்
அந்தமில்லையெனினும் ஆர்வத்தின் பொருள்கொண்டு
சொந்தமென கருத்துக்கள் சொல்லிடுக என்நண்பா

தைமகளின் மணநாள்
இனிய மாலைப் பொழுது
தனிமையைத் துணையாக்கி இமைகளுக்குத் திரைதந்து
எண்ணச்சோலையிலே இளைப்பாற்றிக் கொண்டிருந்தேன்
மனப்பறவை சிறகை நீவிக்கொண்டு வெளியே பறந்தது
அற்புதக் காட்சிகள் கற்பனைக் குவியலாய்

அழகியவயல்வெளி அன்னங்களின் குலவையொலி
அறுவடைமணநாளில் கதிர்நகைகள் கழுத்தாட
பருவத்தின் வனப்போடு நிலம்பார்க்கும் நெல்மகளாள்
குவளைகள் குறும்போடு கொல்லென்று சிரித்திருக்க
நாரைகள் கூட்டணியில் நல்லதாய் இசைவெள்ளம்

ஆரோ வரும் அரவம் கேட்டது
அடியெடுத்த பொன்மலையாய் ஆரணங்கின் உருவமது.

கஞ்சி கலயங்கள் கொஞ்சி யிசைபடிக்க பெண்கள்
மிஞ்சி தரும் தாளத்தில் மெல்ல நடைபயின்று
தத்திவரும் தென்றலை தனக்கே துணையாக்கி
முத்துநகை இதழ்தவழ முன்றானை இசைபாட
தையலென என்முன்னே தைமகளாள் வந்துநின்றாள்

கன்னங்கள் குங்குமமாய் கனியிதழ்கள் துடிதுடிக்க
வண்ணுகம் நிலம்நோக்க மங்கையவள் நாணிநின்றாள்

ஏனம்மா தைமகளே இத்துணை நாணமென்றேன்
மார்கழிப் பனியாடை மறைந்துசெல்லும் காரணமோ
முன்றானை திரைகொண்டு முகநிலவை மறைக்கின்றாய்
கால்களில் கோலமிடும் கலையெங்கே கற்றாயென்றேன்

கொவ்வையிதழ் சிரித்து குறுநகை பூத்தாள்
பவழத்திரையூடே பளிச்சிட்டன முத்துக்கள்

மல்ர்விழி சிவப்பும் மதுவிதழ் வெளுப்பும்
மணியிடை சோர்வும் மனக்கலக்கங்களும்
மணநாள்வரும்போது மங்கையர்க்கு இயல்பன்றோ
வான்நிலவு பொழிந்ததுபோல் மங்கையவள் விடையிறுத்தாள்

மணநாளா தாயே மகிழ்ச்சியிலே கூச்சலிட்டேன்
மனமுவகை பெருகியோட ஒருகணம் மரித்து பின்னுயிர்த்தேன்
எப்போது அந்நாள் இயம்பிடுக என்றிட்டேன்.

பாரினிலே தனியினம் பார்வையிலே பகைவீழ்த்தும்
தேரோடும் வீதியெங்கும் தெள்ளமிழ்து விளைந்தோடும்
காராடும் நறுங்கூந்தல் கன்னியர்தம் விழிவேலால்
போராடும் சிங்கங்கள் பொலிகின்ற பெருநாட்டின்
வேரான பண்பாட்டை விளக்குகின்ற திருநாள்

சீர்கொண்ட செந்தமிழர் சிறப்புக்களின் அரங்கேற்றம்
ஏர்கொண்ட பேருழவர் இமைகளின் பெருங்கனவு
போர்தனிலே திறம்காட்டி புகழ்மாலை மார்பாட
பார்போற்றும் பெருவீரர் படைபோற்றும் நன்னாள்

தாழம்பு செண்டாட தண்முகத்தில் நிலவாட
வேல்விழிக்கு இரையாக வீரரைத் தேடிநிற்கும்
பால்போலும் சொல்வல்ல பாவையரின் திருநாள்

மூத்தகுடி இதுவென்று முன்னோர்கள் கூத்தாட தமிழ்
காத்தகுடி இதுவென்று கன்னித்தமிழ் முழங்கும்
வண்டமிழர் பெருமைகளை வானறியும் திருநாள்

செங்கரும்பு சுவையோடு சிறுவர்கள் கொண்டாட
எங்கும் மங்கலம் பொங்கிடும் பொன்னாள்
பொங்கியெழும் இன்பத்திருநாளாம் பொங்கல் திருநாள்

ஆம் அதுதான் என்மணநாளென்றானவள்

நாவுக்கு தேனுண்டு நாமெல்லாம் கண்டதுதான்
செவிதனக்கும் தேனுண்டோ அது சிந்தைக்கும் பாய்வதுண்டோ
ஏந்திழையாள் மணச்செய்தி இதயத்துள் தேனாய்

தமிழர் திருநாள் தமிழர் திருநாள்
அமிழ்தூற்றான சொற்களை ஐந்தாறுமுறை சொல்லிக்கொண்டேன்
என்னிலைக்கு வரவும் எத்துணையோ மணித்துளிகள்
இன்னமும் வாழ்க்கையிலே இனிமையென்று வேறில்லை
ஈடற்ற பேருவகை இணையற்ற பெருமைநிலை

இன்ப அருவி எனக்குள்ளே எல்லையின்றி ஓடியது

வியர்வை ஆற்றினிலே விலாவெலும்பு உருவிழந்து
ஏரோட்டி வாழ்க்கையிலே இருளோட்டும் உழவர்கள்
பாராட்டிக் கொண்டாடும் பனிமனதின் வெற்றிவிழா

மஞ்சள் முகம்பூசி மதிமுகத்திற் மையெழுதி
கொஞஅசிடும் நெல்லரிசி குடத்திலிட்டு பெண்கள்
குலவையிட்டு கதிரவனை குலம்காக்க போற்றிவிட்டு
மெல்லரும்பு விழியோடு மெலிதான குறுநகையும்
செங்கரும்பின் சுவைமீற சேர்த்தளிக்கும் நல்மொழியும்
எங்கும் திகழ்ந்திருக்கும் ஏற்றமிகு மங்கலமும்
பொங்கிவரும் இன்பத்தை பொலியவைக்கும் பெருவிழா

தைதையென்றாடி தாய்மடியில் இளைப்பாறி
தைமகளை வரவேற்க தத்தைமொழி மழலை கொண்டு
கன்னலின் சுவையோ கவிச்சுவையோ இதுவென்று
முன்னவரும் வியக்க முத்தமிழின் பெருஞ்சுவையை
சின்னஞட்சிறுவயதில் சேர்த்து விருந்தளிக்கும்
குலக்கொழுந்தாம் குழந்தைகளின் கொண்டாட்டத் திருவிழா

விண்ணவர் உலகம் விரைந்து கீழிறங்கியதோ
மண்ணுலகா இல்லையென்று மறுத்துரைக்கும் வண்ணம்
இன்னமுமத் தெந்தமிழால் இனிமையின் எல்லைதொட்டு
பண்ணிசைக்கும் குரல்கொண்சு பற்பலரும் பொங்கலென்று
ஓங்கிக் குரல்கொடுத்து உணர்வில்லா பேரின்பப்
பாங்கோடு சேர்ந்திருக்கும் பார்போற்றும் நல்விழா
அதுவா அதுவா அந்தநாளா உன்மணநாள்
புதுநிலவு போன்றவளே புகன்றிடுக உடனேயே
பொங்கலென்ற பெயரினிலே பூரிப்பின் உச்சியில் நான்
தங்கிவிட்டேன் உரைத்திடுவாய் தாமதங்கள் ஏதுமின்றி

ஆமென்றாள் தைமகள் அமுதச்சொல் கொண்டு
தாமாக இன்பத்தால் தடுமாறும் கால்களையும்
தாம்மாறும் விழிகளையும் தடுத்து நிலைகொணர்ந்து
பூமாறுவிழாயாளை பொறுமையுடன் நான்கேட்டேன்

சீரென்ன வேண்டும் செப்பிடுக சேல்விழியே
வேறென்னவேண்டும் விளம்பிடுக என்றிட்டேன்

ஏதோவொன்று தடுத்தாற்போல் இருகணங்கள் பேச்சிழந்தாள்
மணநாளின் மகிழ்வை மீறி முகத்தினிலே கவலைகுறி

ஒருகணம் இதயம் ஒடுங்கிவி்ட்டு துடித்தது.
கதிகலங்கிக் கேட்டேன் கவலையின் காரணத்தை
மெல்லத்தமிழினி சாகும் அந்த
மேற்குமொழிகள் மண்மிசை ஓங்கும்
என்றந்த கவிதையை கேட்டிருப்பாய் இன்றது
உண்மையானதால் உண்டான கவலையிது
அன்னையை அழைப்பதற்கும் ஆங்கிலம்தான் வாயில்
இன்னும் சொல்வதற்கு என்னெஞ்சம் பதைக்குதையா
இந்தநிலை மாறி இன்னமுதத் தமிழோசை
சொந்த மண்ணிலேனும் சோராது நிலைகொண்டால்
அந்தச் சீர் ஒன்றுபோதும் அகமகிழ்வேன் நானென்றாள்.

சுரீரென்று உரைக்க கற்பனையிலிருந்து மீண்டேன்
சொற்களின் தாக்கமெனைக் கொல்லாமல் கொனஅறது

அவள் சொன்ன சொற்கள் அத்துணை பேருக்கும் சாட்டையாய்
சீரிளமைச் செந்தமிழைச் சிதைக்காது இனியேனும்
பார்புகழ செய்திட்டால் பாவையவள் அகமகிழ்வாள்

உண்டு மகிழவல்ல பொங்கல் திருநாள்
உணர்ந்து செயல்பட

இதுவரை வெறுஞ்சிலையாய் இன்னமுதச் செந்தமிழை
ஏளத்துக்கள்ளாக்கி இருந்திட்டோம் இழிபிறப்பாய்

இனியேனும் ஓர்முடிவை எடுத்திடுவோம் பிசகாமல்
இனிக்கும் கரும்புக்கு இணையான செந்தமிழை
ஏற்றம் பெறவைக்க ஏற்றிடும் சூளுரையை

அப்போதுதான் பொங்கல் அருந்தமிழர் நாளாகும்
இப்போதேனும் உணர்வோம் இன்னமுதத் தமிழ்வாழ !

முனைவர் Dr.ஷங்கரநாராயணன்.