1.
அன்னை தருதமிழும் அடியில் மழலையாய்
பின்னர் மொழியாகி பேச்சாகும் நிலைபோல
முன்னர் அன்புமலர் முகிழ்த்திட்ட என்சகாவும்
என்னுயி ரென்றுறவாய் இயல்புடைத்த நிலைசொல்வேன்
2.
எந்தன் வாழ்வதுவும் இருள்வானில் நிலையின்றி
முந்தும் துயர்முகிலில் முழுதும் மறைந்திருக்க
சிந்தும் புன்னகையால் சீரான கதிர்வீசி
விந்தையென மகிழ்வுறவே விளைந்த்தோர் பிறைநிலவு
3.
அந்நிலவின் கதிராலே அகமெலாம் குளிர்ந்திருக்க
முன்னாளின் துயர்வெம்மை முழுவதும் தளைநீங்கி
என்னாவி அவன்மொழியின் எழிற்றேனுக்காயலைய
பின்னும் பிறவிதன் பெரும்பயனே கண்முன்னே
4.
நாளொரு பேச்சிலே நான்கொண்ட அன்புமலர்
பாளை பிளந்தன்ன பாற்சிரிப்பில் இதழ்விரித்து
மாளாத பேரன்பு மணம்பரப்பி அவனின்றேல்
தாளாத நிலைதந்த தன்மையினை என்சொல்வேன்
5.
அன்பென்று அவன்சொல்ல ஆழமனதில் தேனருவி
இன்பமென்று சொன்னாலோ என்னாவி விண்ணாட்டில்
மன்பதையாய் நான்பிறந்த மாண்பனைத்தும் அவனடியில்
என்புருகப் பொழிந்திடவே இயைந்திட்டேன் பேரன்பால்
6.
விடுமுறை வாந்தாலோ வெங்கனலாய் என்னுள்ளம்
திடுமென்று நெஞ்சுமலர் தீயினிலே உயிர்கருகும்
அடுத்த நாளினிலே அன்புமொழி கண்டுவிட்டால்
விடுத்த உயிர்மலரும் விந்தையென மணம்கமழும்
7.
ஏழையான் எடுத்திட்ட இதயத்துக் கோவிலிலே
மேழியுடைத்திட்ட மேன்மையுடை என்னிறைவன்
ஆழியுதிக்கின்ற அருமுத்து போல்நகையான்
ஊழிவரை அவனடியின் ஊழியத்தில் உளம்தொலைப்பேன்
8.
பேசுகின்ற போழ்தினிலும் பிறைநிலவை முகிழ்மூடும்
மாசதனைப் பல்நடுவில் மணித்துளிகள் இரண்டேனும்
ஆசைப்பதிலியன்றேல் அடிமனதில் வேல்பாயும்
வீசுகின்ற எரிமலையின் வெறிக்குழம்பில் உயிர்சாகும்.
9.
அவனே வாழ்வெனவே ஆவியும் உரைத்தபின்னே
சிவனே வந்தாலும் சிந்தையிலே இடமில்லை
இவனைப் பெறுதற்கே இப்பிறவியென்றெந்தன்
தவமே முன்வந்து தானுரைத்த நிலையென்னே
10.
இத்துணை இருந்தாலும் எனக்கோர் குறையுண்டு
பித்தனென் வாழ்வில் பிறிதொன்றும் இன்பில்லை
அத்தனாய் நான்கொண்ட அவனுக்கே என்னாயுள்
தத்தமாய்த் தருகின்ற தகவில்லை என்செய்வேன்
11.
அன்னவனின் நினைவொன்றே ஆவியென ஆனபின்னே
சின்னவனென் வெறுப்பென்றும் சிறப்பான விருப்பென்றும்
தன்னுடையதில்லாத தகைமையே உடைத்தேன்யான்
இன்னமும் வாழ்வினிலே எல்லாமே அவனன்பே
12.
சின்னஞ்சிறு வயதில் சேர்க்கின்ற பொம்மையென
என்னுள் அவன்னினைவை எடுத்தெடுத்துச் சேர்த்திட்டேன்
பின்னர் மழலைக்குப் பிறிதோர் உலகமதுபோல்
அன்னான் நினைவொன்றே அகிலமாய் அறிந்திட்டேன்.
13.
காதலோ யிஃதென்று களிவேடிக்கையில்சிலபேர்
வேதனையெதற்கென்று வெற்றுத் தேற்றலில்சிலர்
மீதியே யில்லாமல் மெல்லுயிரைத் தந்தபின்னே
சாதல் வரும்வரையில் சளையாத அன்பிஃது
14.
ஏனித்துணை அன்பிங்கு என்மீதென்றெந்தன்
வானிகர் அன்புருவம் வாய்மொழியும் கேட்டது
தானே பெருகிவரும் தாளாற்றும் பேராற்றை
மானும் அன்பிற்கு மறுபதிலென்ன சொல்ல
15.
அன்னவன் மீதன்பு ஆறாகப் பொழிதற்கே
என்னையும் இறைவன் இவ்வண் படைத்திருக்க
பின்னையும் கேள்விகளால் பெரிதான பயனென்ன
இன்னும் பிறவியிலும் என்வேண்டல் இதுதானே
முனைவர்.Dr.ஷங்கர நாராயணன்.
வேண்டுதல்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
சிலருக்கு மட்டுமே இயற்கையிலேயே எழுத வரும்.. அதிலும் வெகு சிலருக்கு மட்டுமே நன்றாக எழுத வரும்.. சந்தேகமில்லாமல் சங்கரன் ஒரு மேதை.. தன் பலத்தை தானே அறியாத மேதை! சங்கரன் மேலும் மேலும் எழுத வேண்டும்.. அவர் திறமையை இந்த உலகம் அறிய வேண்டும்!
சிலருக்கு மட்டுமே இயற்கையிலேயே எழுத வரும்.. அதிலும் வெகு சிலருக்கு மட்டுமே நன்றாக எழுத வரும்.. சந்தேகமில்லாமல் சங்கரன் ஒரு மேதை.. தன் பலத்தை தானே அறியாத மேதை! சங்கரன் மேலும் மேலும் எழுத வேண்டும்.. அவர் திறமையை இந்த உலகம் அறிய வேண்டும்!
Post a Comment